சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல்வேறு மொழியைச் சேர்ந்த முக்கியமான நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய், கமல்ஹாசன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்து மாபெரும் வெற்றி திரைப்படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் இணைய வேண்டும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் ’லியோ’ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணையவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் படத்தைப் பற்றிய அறிவிப்பிற்கு வெளியிடப்பட்ட ப்ரோமோ வீடியோவில் ரஜினியின் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதையாக இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டு வந்தது.
லோகேஷ் கனகராஜின் சினிமா உலகமான LCU யுனிவர்சில் இந்த படம் இடம்பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருந்தது. ஆனால் இப்படம் LCUவில் இடம்பெறாது எனவும் இது தனிக்கதை எனவும் லோகேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூலி படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது. அந்த பாடலும் முழுமையாக வெளியாகவில்லை. அதன் பிறகு எந்தவித அப்டேட்டும் இப்போதுவரை இல்லை.