சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர், ரியாஸ் கான். இவரது மனைவி உமா ரியாஸ். இவரும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் ஷாரிக் ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஒருசில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படமான "நேற்று இந்த நேரம்" படத்தில் நடித்துள்ளார். ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.