சென்னை:சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படமானது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாகும்.
இந்த படத்திற்கு சிவாஜியின் திரைப்படமான பாராசக்தி பெயரை வைத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வந்தது. மேலும் படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவும் தணிக்கை செய்யப்பட்டு, அதன் சான்றிதழும் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த சான்றிதழிலும் பாராசக்தி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை (ஜன.28) மாலை 5 மணிக்கு இந்த படத்தினைக் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தலைப்பு அறிவிப்பு காணொளியாகத்தான் இருக்கும் என இணையத்தில் இதனை வைரலாக்கி வருகின்றனர். அதே நேரம் சில நாட்களுக்கு முன் இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கக்கூடாது என சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதில், “பராசக்தி, இது வெறும் திரைப்படப் பெயர் மட்டுமல்ல. தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952க்கு முன் - 1952க்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம். பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக இருந்ததை மாற்றி, அனல் தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சியைத் தூண்டும் நடிப்பு, இவற்றோடு சமுதாய புரட்சியையும் ஏற்படுத்திய "பராசக்தி" திரைப்படத்தின் பெயரை மீண்டும் ஒரு திரைப்படத்திற்கு வைப்பது என்பதை ஏற்றுக் கொள்ளவே இயலாது” என குறிப்பிட்டிருந்தனர்.
அதனால் நாளை வெளியாகும் அறிவிப்பில் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதேபோலத்தான் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ இன் தலைப்பு நாளைய தீர்ப்பு என இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் படத்தின் தலைப்பு ஜனநாயகன் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர் என்பது நினைவுகூறத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயனின் 25வது படமானதால் 2026 பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:’ஜனநாயகன்’ படத்தில் இடம்பெறுகிறதா விஜய்யின் நெய்வேலி செல்ஃபி சம்பவம்...?
முன்னதாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. அப்போதைய தலைப்பு புறநானூறு. பின்னர் அப்படம் கைவிடப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு தற்போது தலைப்பு மாற்றபட்டுள்ளது.