தெலங்கானா: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் (சி.பி.எஸ்.இ), ஐ.சி.எஸ்.இ, சர்வதேச இளங்கலை பாடத்திட்டம் (ஐ.பி) ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் உள்பட, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை ‘தெலுங்கு’ மொழிப் பாடம் கட்டாயம் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. 2025-26 கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசு மாவட்டம், மண்டலப் பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி உள்பட பிற வாரியத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் தெலுங்கு கற்பிப்பதை கட்டாயமாக்குவதற்காக, தெலங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கட்டாய கற்பித்தல் மற்றும் கற்றல்) சட்டத்தை, 2018-ஆம் ஆண்டில் மாநில அரசு கொண்டு வந்தது.
ஆனால், பல காரணங்களை மேற்கோள்காட்டி, கடந்த கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி, இந்த திட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நிர்வாகத்துடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.