ராய்ப்பூர்:கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் சுதந்திர விழாவில் கொடியேற்றப்பட்டு, சமாதான புறா பறக்கவிடப்படுவது வழக்கம். அந்த வகையில் சத்தீஸ்கர் மாவட்டம் முங்கேலி மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான புன்னுலால் மோலே தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முங்கேலி மாவட்ட ஆட்சியர் ராகுல் டியோ, காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் கொடியேற்றத்திற்கு பிறகு, அமைதி மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாக முன்னாள் அமைச்சர் புன்னுலால் மோலே, மாவட்ட ஆட்சியர் ராகுல் டியோ, காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ஜெய்ஸ்வால் ஆகியோர் வெள்ளை புறாக்களை பறக்க விட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்ட புறாக்கள் வானத்தை நோக்கி பறந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ஜெய்ஸ்வால் பறக்கவிட்ட புறா மேலே பறக்காமல் தரையை நோக்கி கீழே விழுந்தது.
இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிகழ்வு தொடர்பாக X வலைதளத்தில் சச்சின் குப்தா என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து, "பஞ்சாயத் 3 திரும்பவும் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. சுதந்திர தின விழாவின் போது எஸ்.பி பறக்கவிட்ட புறா தரையில் விழுந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.