ஃபதேபூர்: உத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதியாக இருந்து வரும் கைதிகள், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் தங்களின் பங்களிப்பை வெளிபடுத்தும் வகையில், கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கான பைகளை உருவாக்கி, மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியிடம் ஒப்படைத்தனர்.
அந்த வகையில், சிறையில் இருக்கும் பிற கைதிகளைப் போலவே, தானும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காகத் தனது பங்களிப்பை தர விரும்பியுள்ளார், ஜியாவுல் ஹசன் எனும் இளைஞர். அதற்காக, சிறையில் சுத்தம் செய்யும் பணியைச் செய்து, அதில் ஈட்டும் பணத்தை சிறுகசிறுக சேகரித்து, ஆயிரத்து 100 ரூபாய்க்கான காசோலையை மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியிடம் வழங்கியுள்ளார்.
மேலும், ஒரு நாள் பணிக்காக 25 ரூபாய் என 45 நாட்கள் பணி செய்து, சேமித்த பணத்தை அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக அவர் வழங்கியுள்ளார். ஜியாவுல் ஹசனின் இந்த செயல், மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியை நெகிழ்வடையச் செய்துள்ளது. மேலும், ஜியாவுல் ஹசனுக்கும், ராமருக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருந்திருக்கலாம் என மத்திய அமைச்சர் கூறியதாக சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, அயோத்தி ராமர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் வழங்கப்படும் பிரசாதத்திற்கான பைகளைச் செய்து சமர்ப்பித்த சிறைவாசிகளுடன் பேசியுள்ளார். அப்போது, அவர்கள் ராமர் மீது வைத்திருந்த பக்தி குறித்து கேட்டு மணம் உருகிய அமைச்சரின் கண்கள் கலங்கியதாக்க சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.