எர்ணாகுளம்: உலகிலேயே மிகச் சிறிய நிலத்தடி பள்ளிவாசல்களில் ஒன்றான கேரளாவின் அல் முபாஷிரீன் மசூதி கடந்த 3-ந் தேதி அனைத்து மத மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 சதுர மீட்டர் பரப்பளவில் நிலத்திற்கு கீழ் கட்டப்பட்டுள்ள எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தில் உள்ள அல் முபாஷிரீன் பள்ளிவாசல், உலகின் மிகச் சிறிய மசூதிகளில் ஒன்றாகும். மத நல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பள்ளிவாசல், கொத்தமங்கலத்தில் உள்ள பச்சேட்டி என்ற பகுதியில் சூஃபி கல்வி மையங்களை நடத்தும் MAGS அறக்கட்டளை சங்கத்தின் தலைவர் யூனுஸ் ஷா காதிரி சிஷ்டியின் வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்டது.
நிலத்திற்கு கீழ் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாசல், வெறும் 60 நாட்களில் அமைக்கப்பட்டதாகும். இந்த மசூதி பிப்ரவரி 3-ந் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த பள்ளிவாசல் நிலத்திற்கு கீழ் சுமார் 65 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், இரண்டு அறைகளில் மற்ற மதத்தினரும் வந்து தியானம் செய்வதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடனே, கீழே செல்ல படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளின் வழியாக சுரங்கப் பாதையில் நடந்து சென்றால் முடிவில் வலது மற்றும் இடதுபுறங்களில் உள்ள இரு அறைகள் உள்ளன. இங்கு மாற்று மதத்தினர் வந்து தியானம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகள் முழுவதும் பாறைகளைத் துளைத்து அமைக்கப்பட்டுள்ளன. பாறைகளை துளைத்து சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், முற்றிலும் பாதுகாப்பானவை என்று பள்ளிவாசல் குழு உறுதியளித்துள்ளது.
இடது புறத்தில் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்றால் அங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கான அறை உள்ளது. மேலும், தொழுகை நடத்துவதற்கான அறையின் கதவுகள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய பள்ளிவாசல்களில் ஒன்றான இதனை காண தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
பூமிக்கு அடியில் உள்ள இந்த பள்ளிவாசல் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்வதால், இங்கு வந்து செல்வது வித்தியாசமான அனுபவத்தை தருவதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த பள்ளிவாசலுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் இருப்பதாகவும் அவர்கள் உணர்கிறார்கள். பள்ளிவாசல் நிலத்தடியில் இருப்பதால், இது ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை உணர வைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சூஃபி கல்வி நிறுவனங்களின் தலைவரான யூனுஸ் ஷா காதிரி சிஷ்டி, பள்ளிவாசலைக் கட்டுவதன் நோக்கம், அனைத்து மதத்தினரும் ஒரே கூரையின் கீழ் பிரார்த்தனை செய்ய உதவுவதும், அவர்களுக்கிடையேயான வேறுபாடுகளை களைவதும் ஆகும் என்றார்.