டெல்லி:டெல்லியில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுள் ஒன்று தெற்காசியப் பல்கலைக்கழகம் (SAU). இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்ரவரி 26) புதன்கிழமை மகா சிவராத்திரி அன்று மாணவர்களுக்கு மதியம் உணவாக அசைவம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனால், ஆத்திரமடைந்த அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பினர் உணவுக் கூடத்திலிருந்த பணியாளர்கள், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் சில மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக பிற்பகல் 3.45 மணியளவில் மைதாங்கரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தகவலின்பேரில் காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) தரப்பில் போலீசாரிடம் வாதிட்டனர். தொடர்ந்து, இதுகுறித்து டெல்லி ஏபிவிபி தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் “மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த உண்ணாவிரதத்தை அவமதிக்கும் வகையில், மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மாணவர் சங்கத்தின் சூழ்ச்சி வேலை” என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து டெல்லி இந்திய மாணவர் சங்கம் (SFI) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மகா சிவராத்திரியில் அசைவ உணவு வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்காததற்காக அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் சில மாணவர்களைப் பல்கலைக்கழக உணவு விடுதியில் வைத்துத் தாக்கியுள்ளனர். அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP)உறுப்பினர்கள் பெண்கள் உள்பட மாணவர்களை உடல்ரீதியாகத் தாக்கிய சம்பவம் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.