புது டெல்லி:நாட்டின்76வது குடியரசு தினம் இன்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், நாட்டின் உயர்நிலை ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் என பலர் கண்கவர்ந்த இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடந்த பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளை சேர்ந்த வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில கலாச்சாரங்களை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
குறிப்பாக இன்று நடந்த குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். குடியரசு தின நிகழ்ச்சியின்போது நடந்த அணிவகுப்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை காண சுமார் 10,000 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.