விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை வருவாய்த் துறையினர் தற்போது அகற்றியுள்ளனர். இதனால் சிறு விற்பனையாளர்களின் வாழ்வு ஆதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கடைகள் அமைக்கும் வரை, அதே இடத்தில் கடைகள் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒருசில நடிகர்கள் நான்கு படங்கள் நடித்து விட்டு முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் அதை வைத்து கொண்டு அனைத்து நடிகர் நடிகைகளையும் அமைச்சர் செல்லூர் ராஜு குறை சொல்வது தவறு.
தமிழக முதலமைச்சர் ஒரு நல்ல முயற்சியாக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்து உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தை குறை சொல்லும் நோக்கில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வெள்ளை அறிக்கை கேட்டு ஒன்று சேர்ந்து கூவுவது தவறு. பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழி பற்றி பெருமையுடன் பேசிய கருத்தை வரவேற்கிறேன். கமல்ஹாசன் தற்போது தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்திற்கு ஆதரவாக கூவி வருகிறார்" என்றார்.