வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கிராமணி தெருவைச் சேர்ந்த தம்பதி சரவணன் - கோமளா. இவர்களின் மகள் பவித்ராவிற்கு இன்று ஆரணியில் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நேற்று சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ஆரணிக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று வீட்டிற்கு வந்தபோது பூட்டிய வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக சிலர் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சரவணன் அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும், கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டைச் சுற்றிலும் மிளகாய்ப் பொடி தூவி விட்டுச் சென்றுள்ளனர். மகளின் கல்யாணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட கோமளா திருமண மண்டபத்தில் மயக்கமடைந்தார்.
இதனையடுத்து சரவணன் வாலாஜாபேட்டை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முழு விசாரணைக்குப் பிறகே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு மற்றும் கொள்ளை போனப் பொருட்கள் குறித்த முழு விவரம் தெரிய வரும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவணனின் குடும்ப வழக்கப்படி திருமணம் முடிந்த பிறகு வீட்டில் வைத்து தான், நகைகளை மண மகளுக்குப் போடுவார்கள். அதன்படி மகளின் திருமணம் முடிந்த நிலையில் இன்று நகைகளை தனது மகள் கழுத்தில் போட்டு அழகு பார்க்கலாம் என்று ஆசையோடு வீட்டிற்கு வந்தனர். ஆனால், வீட்டில் நகைகள் கொள்ளை போன சம்பவம் சரவணன் - கோமளா தம்பதியிடையே மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: