மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் காலை முதல் மாலை வரை ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிற்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான கட்சிகள் மூலம் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபரை அடையாளம் கண்டு கொண்டனர். இதனையடுத்து திருடனை பிடிபதற்காக காவல்துறையினர் மாறுவேடத்தில் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.
நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் போல் நேர்த்தியாக உடையணிந்து வந்த ஒருவர், ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அமர்ந்து சாவி போட முயன்றதை பார்த்த காவல்துறையினர், அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், சிசிடிவி கேமராவில் கிடைத்த காட்சிகளை வைத்து இவர் தான் தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பொன் பெருமாள் என்பதும் பணத்திற்காக வழக்கறிஞரைப்போல் நீதிமன்றத்திற்கு வந்து பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை திருடி சென்றதும் தெரியவந்தது. தற்போது திருடப்பட்ட வாகனங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.