ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்து திமுக, காங்கிரஸ், அமமுக, முஸ்லீம் லீக், மனித நேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. இதையடுத்து இரண்டாவது நாளான இன்று, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சபாநாயகர் தனபால்: நீங்கள் கொடுத்த மனு ஆய்வில் உள்ளது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: ஆய்வு செய்து தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற பொன்னான வார்த்தையை சொல்லிவிட்டால் நாங்கள் திருப்தியடைவோம்.
சிறுபான்மையின மக்கள் என்றாலே அதிமுகவுக்கு கசக்கிறது என திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின்: நாடு முழுவதும் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்: குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. அதே நேரத்தில் அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளது. எங்கள் ஆட்சியில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கு சிறு பாதிப்பு கூட ஏற்பட்டதில்லை. மாமன், மச்சானாக சிறுபான்மையின மக்கள் பழகி வருகிறார்கள். எதிர்கட்சி திட்டமிட்டு இட்டுக்கட்டி பேசி வருகிறது.
மு.க. ஸ்டாலின்: பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல.
அமைச்சர் உதயகுமார்: சிறுபான்மையின மக்களுக்கு சத்தியம் இட்டு சொல்கிறேன். அம்மா அரசு தான் சிறுபான்மையின மக்கள் தான் காத்து வருகிறது
மு.க.ஸ்டாலின்: நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, ஆங்காங்கே கலவரம் துப்பாக்கிச்சூடு என நடைபெறும்போது இதனை பேரவையில் விவாதிக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.