’கடவுளின் சொந்த பூமி’ என அழைக்கப்படும் கேரளா, தொன்மக் கலைகளிலும் நடனங்களிலும் கூட மிகச் சிறப்பான பெயர்பெற்றது. தெய்யம், கோலம் துள்ளல், பேட்டை துள்ளல், சவிட்டு நாடகம் என கிராமம் சார்ந்த பலவகை நடனக் கலைகளின் வேர்கள் இங்கிருந்துதான் தொடங்கியிருக்கின்றன.
இதில் பாரம்பரிய கேரள நடன வகைகளில் ஒன்றுதான் தெய்யம். வடக்கு மலபார் பகுதி முழுவதிலும் பரவலாக நடத்தப்பட்டு வரும் பழங்கால நடனமுறை இது. குறிப்பாக, இந்துமதப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மதத்தோடு பின்னிப் பிணைந்து நிகழ்த்தப்படும் தெய்யம் நடனம், நடனமாக அல்லாமல் சடங்காகவே நினைத்து செய்யப்படுகிறது.
போராளியும், ஆயுதமும்... இது தான் தெய்யம் நடனத்தின் மையக்கரு
’உத்தம வில்லன்’ படத்தில் வரும் தெய்யம் காட்சியைக் கண்டு பிரமிக்காதவர்கள் இருந்திருக்க மாட்டீர்கள். குடிவழி சார்ந்த போர் வீரர்களையும், அவர்கள் உபயோகித்த ஆயுதங்களையும் வணங்கி வழிபடுவதே தெய்யம் நடனம். வரலாற்றிலும் இது பற்றிய குறிப்புகள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. தமிழிலும் சங்க இலக்கியத்தில் ‘வேலன் வெறியாட்டல்‘ என்ற பெயரில் வீரர்களை வழிபட்ட வரலாறு உண்டு.
பெற்றோர் அலட்சியம்: 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த தெய்யம் நடன வழக்கங்களின் அலங்காரம் இன்று சிதைந்து போகாமல் தொடரப்படுவது அதன் சிறப்பு. தெய்யம் நடனக் கலையில் தேட்டம் மற்றும் வேலாட்டம் என இரண்டு பகுதிகள் உள்ளன. ஆரம்பம் வழிபாடாக தொடங்கி இறுதியில் வீர விளையாட்டு போல் ஆக்ரோஷத்தோடு உச்ச நிலை அடைவதில் நடனம் முடிகிறது.
வாத்தியக் கருவிகளின் இசையும் தெய்யம் நடனத்துக்கென உள்ள பிரத்யேகப் பாட்டும், நடனமும் இணைந்து உணர்வெழுச்சி மிகுந்த ஒரு நடனமாக அமைகிறது.தெய்யம் நடனத் திருவிழா வருடத்துக்கொரு முறை கேரளக் கிராமப்புறங்களில் சடங்காக நிகழ்த்தப்படுகிறது.
பராமரிக்கவும், தொடரவும் ஆட்களில்லாமல் வெறும் வேர்களோடு மட்டும் நிற்கிற கேரளாவின் தெய்யம் நடனக்கலை மட்டுமின்றி நாடு முழுவதும் வழக்கொழிந்து வரும் இதுபோன்ற பல நடனக்கலைகளுக்குப் புத்துயிர் அளித்துப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் உண்டு.